தமிழ்நாடு

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவு

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவு

webteam

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த மார்ச் மாதம் திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஊழல் தடுப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் கடந்தமுறை ஆர்.எஸ் பாரதி கொடுத்த புகாரில் மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் டைரியில் ஓபிஎஸ் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆகையால் சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்கும் சிபிஐ ஏன் இந்த வழக்கை சேர்த்து விசாரிக்க கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் புகார் கொடுத்து நான்கு மாதங்களாகியும் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.  

இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், அதன் அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம்,  வழக்கை முடித்து வைத்தது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் மீதான புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை தனது விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.