நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதோர் பெயர்கள் நீக்கப்படாது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"பிப்ரவரி மாதத்திற்குள் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று நாளிதழ்களில் செய்தி வெளியான நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சரிபார்ப்பு பணிகள் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
மீதமுள்ளவர்களுக்கான சரிபார்ப்புப் பணிகளும் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது வசதிகேற்ப விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் தேவைக்கேற்ப முகாம்கள் நடத்தப்படும்.
ஆகவே கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் பெயர்கள் நீக்கப்படாது. வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.