புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை அதிமுக ஆட்சி 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டது. ஆனால் தொகுதிகளை மறுசீரமைக்கவில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு புதிதான உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் 2019ஆம் ஆண்டு ஊரக அளவில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் அங்கு அரசு தனி அலுவலர் அதிகாரிகளே நிர்வாகத்தை மேற்கொண்டனர்.
தமிழக முதல்வர் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து உள்ளாட்சித்துறை மற்றும் நகராட்சித்துறை அமைச்சர்களுடன் நேற்றையதினம் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர். பெரியகருப்பன் சட்ட மசோதாக்களை பேரவையில் தாக்கல் செய்தனர். மேலும், புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வாக்காளர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா இடையூறு இன்றி பாதுகாப்பை கருத்தில்கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.