தமிழ்நாடு

“புதிய வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை”- முதல்வர் பழனிசாமி

“புதிய வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை”- முதல்வர் பழனிசாமி

EllusamyKarthik

தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் மிக முக்கியம் என 8 வழிச்சாலை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடலூரைத் தொடர்ந்து நாகை மற்றும் திருவாரூர் மாவட்டகளில் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் காலையில் ஆய்வை தொடங்கிய அவர், கருங்கண்ணி பகுதியில் புயல் மற்றும் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பார்வையிட்டார். தொடர் கனமழையால் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்த முதல்வர், விவசாயிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக பழங்கள்ளிமேடுக்குச் சென்ற அவர் அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

மழையால் வீடுகள் இழந்தவர்களுக்கு உதவித்தொகையையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் சென்ற அவர், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொக்காலடியில் மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை வயலில் இறங்கி பார்வையிட்டார். அவரிடம் விவசாயிகள் தங்களுடைய பாதிப்புகளை எடுத்துக் கூறினர். பிற்பகலில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விடுபட்ட பகுதிகளிலும் புயல் மற்றும் மழை சேதம் குறித்து கணக்கெடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறிய அவர், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாகவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் மிக முக்கியம் என்றும் அவர் கூறினார்.

மாலையில் மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை பகுதியில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்தார். சேதம் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்ட பயிர்களை பார்வையிட்ட அவர், மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து தருமபுரம் ஆதினத்துக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 27ஆவது குரு மகா சன்னிதானத்திடம் ஆசி பெற்றார்.