மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- தென்சென்னையில் கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
- திருவாரூரில் 10 வட்டாரத்தில் 16,000 டன் கொள்ளளவுடன், ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் ஏற்படுத்தப்படும்.
- மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.70 கோடியில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும்.
- திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.
- தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும். தமிழ் எழுத்தாளர்கள் மூவருக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் விருது வழங்கப்படும்.
- ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகள், மாநில விருதுகளை பெறும் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும்.
- கொரோனா காலத்தில் களப்பணியாற்றிய இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த திட்டங்கள் அனைத்தும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொண்டபின் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.