போக்குவரத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்!

நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

PT WEB

செய்தியாளர்: முகேஷ்

போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குதல் உட்பட மொத்தம் 6 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்ததை அடுத்து, நேற்று முதல் (ஜனவரி 9) அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப்போராட்டதில் ஈடுபட்டனர் தொழிற்சங்கத்தினர். இன்று காலை 11 மணி அளவில் அடுத்தகட்ட போராட்டமாக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தினை தீவிரப்படுத்தினர். இதனால் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் பாதிக்கப்படுவது மக்களே எனக்கூறி, இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ‘தமிழக அரசு தரப்பில் பேச்சுவார்த்தை பல கட்டங்களிலும் நடந்து முற்றுபெறாமல் உள்ளது. இதனால் தற்போதைக்கு அப்பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கிடையே சட்டவிரோதமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்’ என தொழிற்சங்கத்தினருக்கு எதிராக வாதிடப்பட்டது.

இதற்கு எதிரிப்பு தெரிவித்து வாதிட்ட தொழிற்சங்கத்தினர், “6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினோம் . அதனை ஏற்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மற்றபடி போராட்டம் செய்யவேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு இல்லை. முன்னதாகவே முறையாக போராட்டம் நடத்துவதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எனவே இதனை சட்டவிரோதம் என்று கருத முடியாது” என்றனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தமிழகத்தின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி, ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது?

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் சிரமத்திற்கும், பாதிக்கப்பிற்கும் உள்ளாகிறார்கள்.

போராட்டம் நடத்த உரிமை இல்லை என கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது” என தெரிவித்தனர்.

தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தனர்.

பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், “ஜனவரி 19 வரை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமாட்டார்கள் என நம்புகிறோம். பணிக்கு வரும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பணிக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு முழுமையாக பணியை ஒதுக்க வேண்டும். போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாக உள்ளது. பண்டிகை காலத்தில் ஸ்ட்ரைக் என்பது மக்களை பிணைக்கைதியாக வைத்து போராடுவது போல் உள்ளது” என்று வேதனை தெரிவித்தது.

நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. உடனடியாக நாளைக்கு பணிக்கு திரும்புவதாகவும் தொழிற்சங்கங்கள் உத்தரவாதம் அளித்துள்ளன. மேலும் “எங்களிடம் வழங்க வேண்டிய உரிமைகளையே அரசிடம் கேட்கிறோம். ஜனவரி மாத அகவிலைப்படியைத்தான் உடனே தர அரசிடம் கேட்கிறோம்” என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி 19-ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை உள்ள நிலையில், அதில் உடன்பாடு எட்ட்ட 20-ம் தேதி மீண்டும் போராட்டம் தொடருமென சில தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.