தமிழ்நாடு

முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டிய மேட்டூர் அணை

முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டிய மேட்டூர் அணை

rajakannan

மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டி உள்ளது. எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழை காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வந்தது. அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. இதனால் மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 

மேட்டூர் அணையிலிருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும் என்பதால் சேலம், தஞ்சை, ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபனி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 20 ஆயிரத்து 501 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தொடர் மழையால் இந்தாண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில் 86 ஆண்டுகளில் 44வது முறையாக நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.