திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே சாலை பணிகளை துவக்கி வைக்க அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வந்திருந்தனர். பின்னர், நிகழ்ச்சி முடிந்து காரில் கிளம்பிச் சென்றனர். அப்போது, உப்பாறு அணை அருகேயுள்ள தேர்ப்பாதையில், திரண்ட பெண்கள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென அமைச்சர் கயல்விழியின் காரை முற்றுகையிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் கயல்விழி காரிலிருந்து கீழே இறங்கினார்.
இதையடுத்து அவரை சூழ்ந்து கொண்ட மக்கள், தேர்ப்பாதையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியதோடு திடீரென, ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அமைச்சர்களுடன் வந்திருந்த வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், தாராபுரம் பூளவாடி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.