தமிழ்நாடு

உயிர் கொடுத்து நாட்டின் கொடி காத்த திருப்பூர் குமரன்! பிறந்த தின சிறப்பு பகிர்வு!

உயிர் கொடுத்து நாட்டின் கொடி காத்த திருப்பூர் குமரன்! பிறந்த தின சிறப்பு பகிர்வு!

webteam

அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர் திருப்பூர் குமரன். திருப்பூர் மண்ணுக்கு பெருமை சேர்த்ததுடன் தமிழர்களையும் தலைநிமிர வைத்த அவரது பிறந்த தினம் இன்று.

திருப்பூர் மாவட்டம் சென்னிமலையில், நாச்சிமுத்து -கருப்பாயி தம்பதியின் மகனான குமரன், 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர், குமாரசாமி. நெசவுத் தொழிலில் போதிய வருவாய் இல்லாததால் குமரனின் குடும்பம் திருப்பூருக்கு இடம் பெயர்ந்தது. குடும்ப வறுமையால் பள்ளிப்படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்ட குமரன், தனது 19ஆவது வயதில் ராமாயி என்பவரை மணந்தார்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட குமரன், நாட்டின் விடுதலைக்காக அண்ணல் அறிவித்த போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1932 ஆம் ஆண்டு நாடு முழுவதும் சுதந்திர வேட்கை கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தபோது ஒத்துழையாமை இயக்கத்தை ஒடுக்க வெள்ளையர் அரசு தீவிரமாக செயல்பட்டது.

அச்சமயம் வெள்ளையரின் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது ஆங்கிலேய காவல்துறையினரால் குமரன் தாக்குதலுக்கு ஆளானார். கடுமையாகத் தாக்கப்பட்டு கீழே விழுந்த போதிலும் தனது கையில் இருந்த அக்கால சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை கீழே விடாமல் குமரன் உயர்த்திப் பிடித்தார். அதனால் அவர் கொடி காத்த குமரன் என்றழைக்கப்படலானார்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/KPOA_L-T7jo" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

ஆங்கிலேய காவல்துறையினரால் தாக்கப்பட்ட குமரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜனவரி 11ஆம் தேதி உயிர் நீத்தார். இளமையின் இனிமையை பாதியளவு கூட அனுபவிக்காமல் தனது 28ஆவது வயதிலேயே நாட்டுக்காக உயிரைக் கொடுத்த தியாகி குமரன் என்றென்றும் போற்றப்படுகிறார்.