குற்றவாளி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட போது... ட்விட்டர்
தமிழ்நாடு

நெல்லை: தப்பியோடிய போது சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நெல்லையில் குற்றவாளி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த நிலையில், சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

webteam

செய்தியாளர்: மருதுபாண்டி

விருதுநகர் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (42). இவர் வெள்ளங்குளி பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனத்தை மறித்த தென் திருபுவனம் கிராமத்தைச் சேர்ந்த இருவர், வாகனத்தில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு காரின் பின்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர். இதனை கருப்பசாமி தட்டிக் கேட்டதாக தெரிகிறது.

Accused

இதனால் தகராறில் ஈடுபட்ட இருவரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் கருப்பசாமியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து திருப்புடைமருதூர் பகுதிக்கு சென்ற அவர்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது வீரவநல்லூர் காவல்நிலைய தலைமை காவலர் செந்தில்குமார் என்பவரின் கையில் வெட்டிவிட்டு வாழை தோட்டத்திற்குள் அவர்கள் மறைந்து கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், மூன்று தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடும் பணியை முடிக்கி விட்டுள்ளார். இதையடுத்து தப்பியோடியவர்களில் ஒருவரான பேச்சிதுரை என்பவரை கால் முட்டில் சுட்டு காவல் துறையினர் பிடித்துள்ளனர். அதேபோல் மற்றொரு குற்றவாளியான சந்துரு என்பவரும் கால்கள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காலில் சுடப்பட்ட பேச்சிதுரைக்கு கால் நரம்பு நாளங்கள் பாதிக்கப்பட்டு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய கால் அகற்றப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பியோடிய குற்றவாளி சுட்டுப் பிடிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.