தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டி திருட்டு

புதுக்கோட்டை அருகே காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டி திருட்டு

webteam

புதுக்கோட்டை அருகே காவலர்களை தள்ளிவிட்டு பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழகத்தின் 27 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என மொத்தம் 45ஆயிரத்து 336 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்குச்சீட்டுகளில் குழப்பம் உள்ளதாக புகார்கள் எழுந்ததால் சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே சில பகுதிகளில் அதிகாரிகளுடன் வேட்பாளர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 5 மணியோடு ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு முதல்கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இந்நிலையில், புதுக்கோட்டை பெரிய முள்ளிபட்டியில் வாக்குச்சாவடியின் பின்பக்கக் கதவை உடைத்து வாக்குப்பெட்டி திருடப்பட்டது. காவலர்களை
தள்ளிவிட்டுவிட்டு மர்ம நபர்கள் வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திருடப்பட்ட வாக்குப்பெட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. வாக்குப்பெட்டியை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே நாகையில் கள்ள ஓட்டு போட முயன்ற சத்யசீலன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரன்குடிகாடு
வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர்