தமிழ்நாடு

தூத்துக்குடி: மனைவியின் நடத்தையில் சந்தேகம்; 3 பேர் மீது ஆசிட் வீசிய கணவர் தலைமறைவு

தூத்துக்குடி: மனைவியின் நடத்தையில் சந்தேகம்; 3 பேர் மீது ஆசிட் வீசிய கணவர் தலைமறைவு

kaleelrahman

தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உட்பட 3 பேர் மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி அசோக் நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ரவி (50). இவரது மனைவி மாலா (49). ரவி - மாலா தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். சிப்காட் பகுதியில் இரண்டு சக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்யும் ரவியின், மகன்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். மகளுக்கு சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக ரவி வீட்டில் குடும்ப உறுப்பினர்போல் தூத்துக்குடி பிஅன்டி காலனி பகுதியைச் சேர்ந்த சூசைமச்சாது (48) என்பவரும் பழகி வந்துள்ளார். சூசைமச்சாது பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார். ரவியின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்கான அனைத்து செலவுகளும் சூசைமச்சாது செய்துள்ளார்.

இதையடுத்து நேற்று அசோக்நகரில் உள்ள வீட்டில், சூசை மச்சாது - மாலா இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ரவி இரண்டு சக்கர வாகனத்திற்கு பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் ஆசிட்டை சூசைமச்சாது - மாலா இருவரது முகத்திலும் வீசி உள்ளார். சூசைமச்சாதை அவருடைய பையன் கெர்பின் வழக்கம்போல் கூப்பிட வரும்போது அவன் மீதும் ரவி ஆசிட்டை வீசி உள்ளார். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களுடைய சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் வர ரவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

ஆசிட் வீச்சில் மாலாவுக்கு உடல் பகுதியிலும், சூசைமச்சாது கண்ணிலும் அவரது மகன் கெர்பினுக்கு நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் வேல்முருகன், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ரவியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.