Thoothukudi district collector PT Tesk
தமிழ்நாடு

'மனு எழுத பணம் நான் தர்றேன்; மக்கள்கிட்ட வாங்காதீங்க' - தூத்துக்குடி கலெக்டரின் நெகிழ்ச்சி செயல்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்ட போது, யார் என தெரியாமலேயே பேசி கொண்டிருந்த பெண்ணால் சிரிப்பலை எழுந்தது.

PT WEB

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மனு கொடுக்க வருகிறார்கள். இதற்காக ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் சிலர் மனு எழுதி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், இன்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமிற்கு திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலைக் கிணறு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர்கள் ஆட்சியரிடம், ”நாங்கள் திருச்செந்தூரில் இருந்து வருவதற்கு 100 ரூபாய் செலவு செய்து வருகிறோம். ஆனால் இங்கு மனு எழுதுவதற்கு 50 ரூபாய் கேட்கிறார்கள்” என்று கூறினாராம்.

இதையறிந்த ஆட்சியர் செந்தில்ராஜ் உடனடியாக தனது அலுவலகத்தில் இருந்து வெளியேறி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மனு எழுதும் பெண்களிடம் வந்து இது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது மாற்றுத்திறனாளியான அந்த பெண் முதலில் மாவட்ட ஆட்சியர் என்று தெரியாமல், ”நான் ஒரு மனு எழுதுவதற்கு ரூ.50 கேட்பேன். ஆனால் அவர்கள் ரூ.30 கொடுப்பார்கள். இல்லையேல் 20 ரூபாய் கொடுப்பார்கள். சில பேர் பணம் தராமல் போய் விடுவார்கள். நான் இதை வைத்து தான் எனது காலத்தை கழித்து வருகிறேன்” என்று கூறினார்.

பின்னர், ஆட்சியர் செந்தில் ராஜ் அந்த பெண்ணிடம், “நீங்கள் இலவசமாக மனு எழுதிக் கொடுங்கள். உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் கிடைக்குமோ அதை நானே கொடுத்து விடுகிறேன். இனிமேல் நீங்கள் மனு எழுவதற்கு பணம் வாங்கக்கூடாது. இலவசமாக எழுதிக் கொடுங்கள்” என்றார்.

பின்னர், அருகில் நின்றவர்கள் அம்மா உங்களிடம் பேசி கொண்டு இருப்பவர் யார் என கேட்க 'அதற்கு அந்த பெண் தெரியவில்லை என சொல்ல' அவர் தான் மாவட்ட ஆட்சியர் என கூற அதன் பின் அந்த பெண் வேகமாக, எழுந்து அய்யோ எனக்கு தெரியாது ஐயா என கூறினார். பின் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர்.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திடீரென தனது அறையில் இருந்து வெளியேறி ஆய்வு மேற்கொண்டது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது