தன்னுடைய மூலிகை பெட்ரோல் குறித்த அறிக்கையை தமிழக மக்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொண்டு சேர்க்க வேண்டுமென்று ராமர் பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்
மூலிகை மூலம் பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து விட்டதாக தமிழகத்தில் ராமர் பிள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மூலிகை மூலம் பெட்ரோல் என்பது சாத்தியமா என இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் 2000 ம் ஆண்டு பெட்ரோலில் கலப்படம் செய்து 'ராமர் பெட்ரோல்' என விற்பனை செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேர் மீது எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது.
மேலும் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக கூறி பொதுமக்கள் பலரிடம் மோசடி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ராமர் பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தன்னுடைய மூலிகை பெட்ரோலை நிச்சயம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என்று கூறிய ராமர் பிள்ளை, அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கினார். ஆனால் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் பிரதமர் மோடிக்கும் 'ராமர் பிள்ளையின் கருணை மனு' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ''2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மூலிகை பெட்ரோல் திட்டவரைவை பிரதமர் பார்வையிட்டார்.
அதனை முழுமைப்படுத்தக் கூறினார். ஆனால் அதை நிறைவேற்றக்கூடாது என பல சதிகள் நடந்துள்ளன. முரளிமனோகர் ஜோஷியை தொடர்புகொண்டு என்னுடைய மூலிகை பெட்ரோல் குறித்த தகவல்களை ஆலோசிக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அது குறித்து தமிழக மக்களிடம் அறிக்கையை சமர்பிக்க வேண்டும். வரும் 10 தேதிக்குள் இதனை நீங்கள் செய்ய வேண்டும். இல்லை என்றால் நான் மறைந்துவிட்டேன் என்று செய்திதான் உங்கள் காதுகளுக்கு எட்டும். இதை நான் மரணத்தில் விளிம்பில் இருந்து கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.