திருவள்ளூரில் இளம் பெண்கள் காணாமல் போகும் நிலையில், சிறுவனை கடத்த முயன்றதாக ஒரு பெண்ணை பிடித்து காவலர்களிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
கடந்த சில தினங்களாக திருவள்ளூரில் 10 வயது முதல் 20 வயது வரையிலான இளம்பெண்கள் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் கொசவன்பாளையம் பகுதியில் சிறுவன் ஒருவனுக்கு பெண் ஒருவர் பிஸ்கட் கொடுத்து கடத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திருவள்ளூரை அடுத்த கொசவம்பாளையத்தை சேர்ந்த ஏழுமலை-நீலா தம்பதியின் மகன் நிஷாந்த். ஆறாம் வகுப்பு மாணவனான இச்சிறுவனை, வீட்டு அருகிலேயே அடையாளம் தெரியாத மூன்று பெண்கள் பிஸ்கெட் கொடுத்து கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
அவர்களுடன் செல்ல மறுத்து சிறுவன் சத்தம் போட, சுற்றுப்புறத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர். மக்கள் வருவதைக்கண்டு 2 பெண்கள் ஓட்டம் பிடிக்க, ஒரு பெண் சிக்கிக்கொண்டார். காவல்துறையினருக்கு தகவல் தெரிய, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அப்பெண்ணை மீட்டு தாலுக்கா காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த சூழலில், காவல்துறையினர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பிடித்துக் கொடுத்த தங்களையே தாக்கியதாகவும் கூறி பொதுமக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து டிஎஸ்.பி ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர், சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பெண்ணை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால், அதிவிரைவுப்படை காவலர்கள் சாலைமறியல் செய்தவர்களை விரட்டியடித்தனர். அப்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, மூன்று பெண்களும் கிராமம், கிராமமாக சென்று ஜோதிடம் சொல்வோம் என தெரிவித்துள்ளார். அத்துடன் சுருக்குப்பை விற்பனை செய்வதையும் தொழிலாக மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். இருப்பினும் எதற்காக பிஸ்கட் கொடுத்தார்? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.