ஆரோக்கியமான பிரசாதங்கள் மற்றும் உணவுகள் என்பதை உறுதி செய்யும் தரச்சான்றிதழை, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் பெற்றுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக இந்த தரச்சான்றிதழை பெறுவது நெல்லையப்பர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், தேசிய அளவில் கோயில்களில் தயாரிக்கப்படும் அன்னதானம் மற்றும் உணவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து போக் ( BHOG - Blissful Hygienic offering to god ) என்னும் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பிரசாதங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் தரச்சான்றிதழ் இதுவாகும்.
இந்தச் சான்றிதழை நெல்லை மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் தமிழகத்தில் முதல் முறையாக பெற்றுள்ளது. கோயில்களில் சமைக்கப்படும் உணவுகள், உணவு சமைப்பவர்கள், சமையல் செய்யும் இடம் இவற்றின் சுகாதாரம் மற்றும் பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள், உபகரணங்கள் இவற்றை பரிசோதித்து இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள கோயில் நிர்வாகத்தினர், “நெல்லையப்பர் கோயிலில் நாள்தோறும் ஆறுகால பூஜைகள் நடைபெற்றாலும் மதியம் நடைபெறும் உச்சிக்கால பூஜை மிக விசேஷமானது. ஒரு பெண் எப்படி நாள்தோறும் தன் கணவருக்கு சமையல் செய்து உணவு கொண்டு செல்வாரோ, அதேபோல அம்பாள் சன்னதியில் இருக்கும் மடப்பள்ளியில் சமையல் செய்யப்பட்டு சுவாமிக்கு நாள்தோறும் மதிய உணவு கொண்டு செல்லப்படுகிறது. கோயில் பிரசாதங்கள் முழுமையாக சுகாதார ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பக்தர்களுக்கும் மக்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.