தமிழ்நாடு

என்னமா யோசிக்கிறாய்ங்க: பசை தடவி பணம் திருடிய அர்ச்சகர்கள் கைது

என்னமா யோசிக்கிறாய்ங்க: பசை தடவி பணம் திருடிய அர்ச்சகர்கள் கைது

webteam

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலில் கண்காணிப்பு கேமராக்களை துணியில் மூடிவிட்டு உண்டியலில் இருந்து காணிக்கைகள் திருடிய அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் புகழ் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலை கோயில் உள்ளது. கோயிலில் விலை மதிப்பில்லாத சிலைகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதால் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூலவர் உள்ள கருவறையில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு கேமராவை குறிப்பிட்ட கால இடைவெளியில் சிலர் துணியால் மூடுவதும் சிறிது இடைவெளி விட்டு மூடப்பட்ட துணியை விலக்குவதும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

இந்த இடைவெளி நேரத்தில் கருவறையின் எதிரே உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் ரூபாய் நோட்டுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது கோயில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்து. இதுகுறித்து அர்த்தநாரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டிஎஸ்பி ராஜு தலைமையிலான காவல்துறையினர் கோயில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து கோயில் அர்ச்சகர்கள் ஞானமணி மற்றும் அவரது மகன் முல்லை வனநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மூங்கில் குச்சிகளில் பசையை தடவி உண்டியலில் இருந்து இருவரும் பணத்தை திருடியது தெரியவந்தது. இருவரிடம் இருந்து 56630 ரூபாயை பறிமுதல் செய்தனர்.