தமிழ்நாடு

100 கிலோ எடையுள்ள சிலை - தூக்கிச்செல்லமுடியாத விரக்தியில் போட்டுடைத்த திருடர்கள்!

100 கிலோ எடையுள்ள சிலை - தூக்கிச்செல்லமுடியாத விரக்தியில் போட்டுடைத்த திருடர்கள்!

webteam

மாமல்லபுரம் சிற்பக்கலை கூடத்தில் 100 கிலோ எடையுள்ள அம்மன் சிலையை திருடி தூக்கிச்செல்ல முடியாமல் பளு அதிகமாக இருந்த விரக்தியில் கீழே போட்டு இரண்டு துண்டாக உடைத்து விட்டு சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் சாலை, பொதுப்பணித்துறை சாலை, ஐந்து ரதம் சாலை, கல்பாக்கம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட கற்சிற்பக்கலை கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்த கற்சிற்ப கூடங்களில் ஒரு அடி முதல் 10 ஆடி உயரம் வரை உள்ள கற்சிலைகள் வடிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுவதுண்டு.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் தங்கள் பகுதிகளில் திருப்பணி செய்யப்படும் கோயில்களில் வைப்பதற்காக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கற்சிலைகளை வாங்கி செல்வதுண்டு.

இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரை சாலையில் உள்ள ஒரு சிற்பக்கலை கூடத்தில் 3 அடி உயரத்தில், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ எடையுள்ள கருமாரியம்மன் சிலை விற்பனைக்காக அந்த சிற்ப கலைக்கூடத்தின் முகப்பு வாயிலில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு மர்ம ஆசாமிகள் இருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சென்று அந்த அம்மன் சிலையை திருடி எடுத்துச்செல்ல முயன்றுள்ளனர்.

அதிக எடை காரணமாக அம்மன் சிலையை தூக்கமுடியாத நிலையில், பலமுறை முயற்சித்தும் தாங்கள் வந்த திருட்டு வேலை எளிதாக முடியாமல் தோல்வியில் முடிந்த விரக்தியில் ஆத்திரமடைந்த இரு நபர்களும் சிலையை அப்படியே கீழே போட்டதில் அச்சிலை இரண்டாக உடைந்து விற்பனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் வீணாகி போனது. பிறகு சிலை திருடர்கள் அங்கிருந்து வெறும் கையுடன் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். பிறகு கற்சிற்பக்கலை கூட உரிமையாளர் சிற்பி விஜய் என்பவர் காலை தனது சிற்பக்கூடத்தை திறக்க வந்தபோது, அம்மன் சிலை இரண்டு துண்டாக உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து திருட வந்து, சிலையை விற்பனைக்கு பயன்படுத்த முடியாமல் சேதப்படுத்திவிட்டு சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசார் அந்த சிற்பக்கலை கூடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகள் உருவம் அதில் பதிவாகி உள்ளதா? என இரவு நேரத்தில் அப்பகுதிக்கு வந்த வாகன விவரங்களை திரட்டி விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து சிலை திருட்டு சம்பவங்களால் அச்சமடைந்துள்ள சிற்பிகள் தங்கள் சிற்பக்கூடங்களில் வெளிப்புறங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள திருடி செல்லும் அளவில் எடை குறைவாக உள்ள சிலைகளை திருட்டு ஆசாமிகளுக்கு பயந்து ஒன்றுடன், ஒன்றாக சங்கிலியால் இணைத்து கட்டி வைத்து பாதுகாக்க துவங்கி உள்ளனர்.