தமிழ்நாடு

அரிவாளால் வெட்டிய திருடன் : ரத்தம் வடிய விரட்டிப்பிடித்த காவலர்!

அரிவாளால் வெட்டிய திருடன் : ரத்தம் வடிய விரட்டிப்பிடித்த காவலர்!

webteam

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் தம்மை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய செல்போன் பறிப்பு கொள்ளையனை வெட்டுக்காயத்துடன் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் விரட்டி பிடித்தார். 

சென்னை சென்ட்ரல் புறநகர் ‌ரயில் நிலையம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடம். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருவோரும், புறநகர் வாசிகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வீடுகளுக்கு செல்ல பெரிதும் உதவிபுரிவது, இங்கிருந்து நகரின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் மின்சார ரயில்கள்தான். அதிகாலை 4 மணி முதல் ரயிலுக்காக புறநகர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் வரத்தொடங்குகின்றனர். அவ்வாறு இன்று அதிகாலை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களிடம், பயணி ஒருவர் தனது செல்போன் திருடப்பட்டு விட்டதாக புகார் அளித்தார். 

இதனையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர். சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்படை காவலர் யோகேஷ் குமார் மீனா, பயணச்சீட்டு வாங்கும் இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 5 பேர் அமர்ந்திருப்பதை கண்டார். அவர்களில் ஒருவர் பழைய குற்றவாளி போன்று தெரிந்ததால், அவரை தனது செல்போனில் யோகேஷ் படம் பிடித்தார். உடனே யோகேஷிடம் இருந்து செல்போனை பறித்த 5 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். அவர்களை துரத்திய போது தப்பியோடியவர்களில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் யோகேஷ் தலையில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த யோகேஷூக்கு தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. 

இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் தப்பியோடியவர்களை துரத்திச் சென்ற யோகேஷ், தன்னை வெட்டியவரை பிடித்து பெரியமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் யோகேஷை தாக்கியவர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜய் என்பதும் ரயில் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த யோகேஷுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்தம் கொட்டிய போதும் விடாமல் துரத்திச் சென்று கொள்ளையனை பிடித்த ரயில்வே பாதுகாப்புப்படை காவலர் யோகேஷுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.