தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்புவதை தவிர தமிழக ஆளுநருக்கு வேறு எந்த வழியும் இல்லை என மூத்த வழக்கறிஞரும் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் கூறியுள்ளார்.
டெல்லியில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், ''ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அவர் தன்னைத்தானே குடியரசுத் தலைவராக நினைத்துக் கொண்டு அதனை செய்திருக்கிறார். எனவே மீண்டும் அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை அதற்கு அரசியல் சாசனத்தில் இடமும் இல்லை எனவே இதனை குடியரசுத் தலைவருக்கு தான் அவர் நேரடியாக அனுப்பி வைக்க இயலும்.
குடியரசுத் தலைவருக்கு இந்த மசோதாவில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை கேட்பதற்கு அதிகாரம் இருக்கிறது. தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஆவணங்களை போதுமானதாக இருக்கும் பட்சத்தில் அதன் அடிப்படையிலேயே குடியரசுத் தலைவர் முடிவெடுக்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.