தமிழ்நாடு

தேனி: சிறிய கோவில் திருவிழாக்களில் பங்கேற்க அனுமதி கோரி கிராமிய கலைஞர்கள் மனு

தேனி: சிறிய கோவில் திருவிழாக்களில் பங்கேற்க அனுமதி கோரி கிராமிய கலைஞர்கள் மனு

kaleelrahman

சிறிய கோவில் திருவிழாக்களில் பங்கேற்க அனுமதி கோரி கிராமிய கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள கலைவாணி கிராமிய கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணன் உன்னியிடம் மனு அளிக்கப்பதற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் தங்களது வாத்தியங்களுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக கிராமியக் கலைஞர்கள் அனைவரும் தவில், பேண்டு வாத்தியம், நாதசுரம், பறை, தப்பு உள்ளிட்ட வாத்தியங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்புற வாயிலில் வாசித்தனர். பின்னர் கிராமிய இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் மகேஸ்வரன், செயலாளர் மணிகண்டன் மற்றும் பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணன் உன்னியை சந்தித்து மனு அளித்தனர்.

தமிழகத்தின் பாரம்பரியத்தை காத்துவருவது கிராமியக் கலைஞர்கள்தான். தமிழகம் முழுவதும் 3 லட்சம் கிராமியக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரமாக கருதுவது திருவிழாக்களை மட்டுமே. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தடையால் திருவிழாக்கள் எங்கும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுசிறு திருவிழாவிற்காவது அனுமதி வழங்க வேண்டும் என்றும், தங்களை அந்த திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரித்துள்ளனர். திருவிழாக்கள் நடத்த வாய்ப்பே இல்லை என்கிற பட்சத்தில் தங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.