மாட்டுப் பொங்கலை முன்னிட்டு உருவ வழிபாடு இல்லாமல் மாட்டிற்கு பட்டத்து அலங்காரம் செய்து ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் பல ஆண்டுகளாக மாட்டை மட்டும் வழிபடும் மிகவும் சிறப்புமிக்க ஒரு இடமாக நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழுவம் உள்ளது. இந்த கோயிலில் பல வருடத்திற்கு மேலாக, சிலை உருவ வழிபாடு இல்லாமல் மாட்டை மட்டுமே வழிபட்டு வருவது மிகவும் சிறப்பு மிக்க ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும் தமிழகத்திலேயே தென் மண்டல பகுதியில் மாட்டுக்கென அமைக்கப்பட்டு வழிபடும் இந்த கோயில் மிகவும் பிரபலமானதாகவும் பிரசித்தி பெற்றதாகவும் உள்ளது. இந்த கோயிலில் பட்டத்து மரியாதையுடன் மாட்டை வழிபடுவது வழக்கமாக உள்ளது. மாட்டு பொங்கலான இன்று முக்கிய வீதிகளில் ராஜ அலங்காரத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள், மாடுகளை வழிபட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் அதிகமான மக்கள் இந்த மாட்டு தொழுவில் உள்ள மாடுகளை வழிபட்டு வருகின்றனர்.