தமிழ்நாடு

தேனி: கழிவறையை சுத்தம் செய்த அரசுப்பள்ளி மாணவர்கள் - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்

தேனி: கழிவறையை சுத்தம் செய்த அரசுப்பள்ளி மாணவர்கள் - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்

webteam

ஆண்டிபட்டி அருகே அரசுப் பள்ளியில் கழிவறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ வெளியான நிலையில், தலைமையாசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பள்ளி முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகரில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 180 மாணவ மாணவிகளும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்ட மாணவர்களின் பெற்றோர்களும் இப்பகுதி பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் நேற்று நேரடியாக பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்திலையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியரை பணிநீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

இதையடுத்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருவதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கழிப்பறையை மாணவர்களே சுத்தம் செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.