தேனி குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் மலையேறும் பயிற்சிக்காக சென்னையிலிருந்து 24 பேரும், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து 12 பேரும் சென்றிருந்தனர். கொழுகுமலைப் பகுதியில் இருந்து நேற்று அனைவரும் மலையில் இருந்து இறங்கும்போது, திடீரென ஏற்பட்டக் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சென்னை சேர்ந்த நிஷா என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆணையில், குரங்கணியில் காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுதொடர்பாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிக்கை அனுப்பிய தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க பரிந்துரைத்திருந்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த அறிக்கையை பரிசீலித்து தமிழக அரசு உரிய இழப்பீட்டை அறிவிக்கும் என தகவல் வெளியானது.