முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ள நிலையில், விநாடிக்கு 772 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து கனமழை கொட்டிக் தீர்த்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை 141 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிப் பெரியாறு, சப்பாத்து, உப்புத்தர உள்ளிட்ட கரையோரப் பகுதி மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 'ரூல் கர்வ்' முறை அமலில் உள்ளதால் அணையின் நீர்மட்டத்தை 141 அடியாக நிலை நிறுத்துவதற்காக 2 மதகுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 772 கன அடி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறந்து கேரளாவிற்கு உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர். தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 2,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 7,396 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து விநாடிக்கு 3,348 கன அடியாக உள்ளது.