கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் வளாகத்திலேயே செயற்கையாக அமைக்கப்பட்ட ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது. இந்நிகழ்ச்சியின்போது பல லட்சம் பேர் வைகை ஆற்றில் திரண்டு கள்ளழகரை வரவேற்பது வழக்கம். இந்த நிலையில் கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தாண்டும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. எனினும் பொதுமக்களை அனுமதிக்காமல், ஆகம விதிப்படி அழகர் கோயில் வளாகத்திலேயே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அதன்படி கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23-ம் தேதி சுவாமி புறப்பாடுடன் திருவிழா கோயில் வளாகத்தில் தொடங்கியது. ஐந்தாம் நாளான இன்று காலை குதிரையில் எழுந்தருளும் கள்ளழகர், ஆண்டாள் மாலை சாற்றுதலை ஏற்றுக்கொண்டு சம்பிரதாயப்படி ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதற்காக அழகர் கோயில் வளாகத்திலேயே தரையில் பாலித்தீன் விரிப்புகள் விரித்து அதில் தண்ணீரை நிரப்பி, வைகை ஆற்றை போன்று செயற்கையான செட் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர். அப்போது உடலில் வெண் பட்டும் மேலே பச்சைப்பட்டும் அணிந்திருந்தார்