தமிழ்நாடு

குற்றால அருவிகளில் இனி இரவும் குளிக்கலாம் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றால அருவிகளில் இனி இரவும் குளிக்கலாம் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

JustinDurai

நேற்று முதல் குற்றால அருவிகளில்  24 மணிநேரமும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக குளிக்க அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம் இரவு நேர குளியல் பற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது.

இதனை கவனத்தில் கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க அனுமதி கடிதம் கொடுத்திருந்தார். மேலும் திமுக மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். தென்காசி எம்எல்ஏ பழனி நாடாரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 24 மணிநேரமும் குளிப்பதற்கு அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்.

இதனை கொண்டாடும் வகையில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினரும் அதிமுகவினரும் மாறி மாறி கொண்டாடினார்கள். ஐந்தருவி, மெயினருவியில் இரவு நேரத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றால அருவியிலும் இரவில் குளிக்க அனுமதி கேட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்: காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ10 கொடுக்கப்படும் -நீலகிரியில் புதிய திட்டம் ; முழுதகவல்