தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு: மீண்டும் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! இருதரப்பு வாதங்கள் என்ன?

அதிமுக பொதுக்குழு வழக்கு: மீண்டும் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்! இருதரப்பு வாதங்கள் என்ன?

webteam

அஇஅதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு வரும் ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சென்னையில் கடந்த ஜூலை 11ம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று ஆகஸ்ட் 17ம் தேதி தீா்ப்பளித்தாா்.



தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. செப்டம்பர் 5ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கி இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமரவும் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் 6ம் தேதி  விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 12ம் தேதி விசாரிப்பதாகவும்,இந்த இடைப்பட்ட காலத்தில் எதிர்மனுதாரர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் என்ன நிவாரணத்தை எதிர்பார்க்கிறீர்கள், இதுதொடர்பாக என்னென்ன விவரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை இடைக்கால மனுவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தொடர்து கால அவகாசம் கேட்பததற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி  உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதையடுத்து அதற்கான தேர்தல் தேதியானது எப்போது வேண்டுமானால் அறிவிக்கப்படலாம். அவ்வாறான சூழலில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பெயரை குறிப்பிட்டோ அல்லது இரட்டை இலை சின்னத்தை கேட்டோ கட்சி பணிகளில் எந்தவித இடையூறுகளையும் விளைவிக்க கூடாது.

மேலும் இதுதொர்டபாக தேர்தல் ஆணையத்தை அணுகி எந்தவித நிவாரணங்களையும் கேட்கக் கூடாது என தடை விதிக்க வேண்டும். மேலும் பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை காரணம் காட்டி கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை பதிவேற்றம் செய்யாமல் தேர்தல் ஆணையம் இருக்கிறது. அதனால் கட்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக ஓபிஎஸ் சார்பில் விளக்க மனு ஒன்றும் தனியாக தகவல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், “நீங்கள் கேட்டீர்கள் என இன்றைய நாளில் நாங்கள் வழக்கை பட்டியிலிட்டோம். ஆனால் மற்ற வழக்கையே நாங்கள் விசாரிக்கவில்லை. அலுவல் நேரமும் முடிந்துவிட்டது” என கூறினார்கள்

ஈ.பி.எஸ். தரப்பில் இருந்து, “பொதுக்குழு மற்றும் தீர்மானங்களை எதிர்த்து போட்ட வழக்கு காலாவதியாகிவிட்டது. எனவே இடைக்கால மனுவை விசாரணை செய்ய வேண்டும். இந்த வழக்கை குறைந்தபட்சம் விடுமுறைக்கு பின் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

ஓ.பி.எஸ் தரப்பில் “பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு எந்த வகையிலும் காலாவதியாகவில்லை. ஏனெனில் பொதுக்குழு கூட்டப்பட்ட நடைமுறை மற்றும் இயற்றப்பட்ட தீர்மானங்கள் சட்ட விதிகளை மீறியது ஆகும். எனவே எதிர்தரப்பு வாதம் தவறானது” என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அஇஅதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 4.1.2023  பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்