தமிழ்நாடு

”கடல்நீரை உறிஞ்சும் வானம்” - மீனவர் எடுத்த வைரல் வீடியோ

”கடல்நீரை உறிஞ்சும் வானம்” - மீனவர் எடுத்த வைரல் வீடியோ

webteam

ராமேஸ்வரத்தில் கடல் நீர் ஆவியாகுவது போன்ற வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே உள்ள வேதாளைக் கடலில் இன்று காலை 10 மணியளவில் கடலில் கரும்மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் சுழல் காற்று  தோன்றி மறைந்ததாக நேரில் பார்த்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில் “கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால் கடலில் சுழல் உருவாகிறது. பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது சுழல் ஏற்படும். இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் மீண்டும் சமமாக மாறும் போது சுழல் மறைந்து விடும். இந்த அதிசய நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும்.

கடலில் அரிதாக நிகழக்கூடிய இத்தகைய சுழல் நிகழ்வை கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், கடலில் பயணம் மேள்பவர்கள், வானியல் ஆய்வாளர்கள் ஆகியோர் காண வாய்ப்புகள் அதிகம் உண்டு” என்றனர்.