தமிழ்நாடு

எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

webteam

தருமபுரி அருகே விவசாய நிலங்களில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் முயற்சிக்கு கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த சிவாடி கிராமத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (எச்.பி.சி.எல்) சார்பில், எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்வதற்காக, தருமபுரி மாவட்டத்தில் சிவாடி என்ற இடத்தில் சேமிப்புக் கிடங்கு அமைக்க எச்.பி.சி.எல் நிறுவனம் திட்டம் தயாரித்துள்ளது. ஏற்கனவே விஜயவாடாவில் எரிபொருள் குழாய் பாதை அமைத்துள்ள இந்நிறுவனம் அங்கிருந்து தருமபுரி மாவட்டம் சிவாடி வரை 697 கி.மீட்டருக்கு எரிபொருள் குழாய் பாதையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள குப்பத்தில் இருந்து சிவாடி வரை குழாய்கள் கொண்டு வருவதற்கான பாதைகளும் வகுக்கப்பட்டுள்ளன. சிவாடியில் தேர்வு செய்யப்படும் இடத்தில், ஓராண்டுக்கு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் இருப்பு வைக்கப்படும். இங்கிருந்து கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படும். 

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ரயில் நிலையம், சேலம் விமான நிலையத்திற்கு அருகிலும் இருப்பதால், இத்திட்டத்துக்கு சிவாடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்கு உள்ளூர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இங்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைப்பதால், அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட்டால் பாதிப்புக்கள் கடுமையாக இருக்கும் என்றும் கருவுற்ற பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படவும் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, ’எங்கள் கிராமத்தில் சுமார் 150 முதல் 200 ஏக்கர் வரை விவசாயம் நடந்து வருகிறது. பெட்ரோல் சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கான முயற்சியில் தனியார் நிறுவன அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் ஆபத்து மிகுந்த எரிபொருள் கிடங்கை, இங்குள்ள நிலத்தில் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். மீறி, நிலம் எடுக்க முயற்சித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர். 

தருமபுரி மாவட்டத்தில் ஏற்கெனவே உயர் அழுத்த மின்பாதை திட்டங்கள், கெயில் திட்டம் எனத் தொடர்ந்து விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும். எனவே, இத்தகையத் திட்டங்களை மாற்று வழிகளில் செயல்படுத்த முயற்சிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.