தமிழ்நாடு

தண்ணீர் பாட்டில் 100 ரூபாய்;தோசை 100 ரூபாய் : தவித்துப் போன பக்தர்கள்

தண்ணீர் பாட்டில் 100 ரூபாய்;தோசை 100 ரூபாய் : தவித்துப் போன பக்தர்கள்

webteam

சதுரகிரி மலையில் அன்னதான மடங்கள் மூடப்பட்ட நிலையில், உணவுப் பொருள்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் பக்தர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சதுரகிரி மலை. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள இந்த மலையில் சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. சுந்தரமகாலிங்கம் கோயிலில் அனைத்து அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டு வருகிறது. 

இந்த நிலையில் பல்வேறு சுகாதார காரணங்களை காட்டி அனைத்து அன்னதான மடங்களையும் அறநிலையத்துறை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இவற்றை திறக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும், அன்னதானக் கூடங்கள் திறக்கப்படவில்லை.

இந்த சூழலில் அமாவாசை வழிபாட்டுக்காக அங்கு திரண்ட பக்தர்கள், உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்துள்ளனர். அன்னதானக் கூடங்கள் இல்லாததால், அங்குள்ள தனியார் உணவு விடுதிகளில் இட்லி 20 ரூபாய், தோசை 100 ரூபாய், தண்ணீர் பாட்டில் 100 ரூபாய் என அதிரடியாக விலை உயர்த்தப்பட்ட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள பக்தர்கள், மீண்டும் அன்னதானக் கூடங்களை திறக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறையை வலியுறுத்தியுள்ளனர்.