தமிழ்நாடு

சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல்: 3 திமுக கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் மீது வழக்கு!

சசிகலா புஷ்பா வீட்டில் தாக்குதல்: 3 திமுக கவுன்சிலர்கள் உட்பட 13 பேர் மீது வழக்கு!

webteam

பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவை சேர்ந்த 3 மாமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் வசித்து வருகிறார். இவர் நேற்று அவர் காலை 11 மணியளவில் நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் டூவிபுரம் மாநகராட்சி 30வது வார்டு திமுக பெண் மாமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டமணி மற்றும் அவரது கணவர் ரவீந்திரன், இவர்களுடன் லெவஞ்சிபுரத்தைச் சார்ந்த 45வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், மற்றொரு (30வது) வார்டு மாமன்ற உறுப்பினர் இசக்கி ராஜா உள்ளிட்டோர் 2 ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் அங்கு சென்று சசிகலா புஷ்பாவின் வீட்டை தாக்கி சேதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

அவற்றுடன் காரின் கண்ணாடியை அவர்கள் உடைத்ததாகவும், மேற்படி சுமார் 2.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் தூத்துக்குடி மேல சண்முகம் 5 வது தெருவை சார்ந்த பாஜக பிரச்சார பிரிவு தெற்கு மாவட்ட செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி என்பவர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் இவர்கள் 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவரும் நிலையில், தற்போது ராமகிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் வீட்டை சேதப்படுத்தியதன் பின்னணியில், அமைச்சர் கீதா ஜீவன் மீது சசிகலா புஷ்பா முன்வைத்த காட்டமான விமர்சனங்களே காரணம் என சொல்லப்படுகிறது. சமீபத்திய மேடைப்பேச்சான அதில், “நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது” என அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆவேசமாக பேசினார் பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா.

முன்னதாக அமைச்சர் கீதா ஜீவன் கோவில்பட்டியில் நடந்த அன்பழகன் நூற்றாண்டு பொது கூட்டத்தில் “தூத்துக்குடியில் அண்ணாமலை மேடையில் ஏறும் போது நாங்கள் மேடையில் ஏறுவோம்” என பேசியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று பேசிய சசிகலா புஷ்பா, கொலை மிரட்டல் விடுத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தாக்குதல் நடத்தினர் சிலர். அந்த வழக்கிலேயே தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பக்கம், கீதா ஜீவன் மீதான மிரட்டலுக்காக சசிகலா புஷ்பா மீது திமுக வடக்கு மண்டல மாணவரணி சார்ந்த சீனிவாசன் என்பவர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் (504,505/2,506/1) வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.