தமிழ்நாடு

'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' ? டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்

'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' ? டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்

webteam

திருச்செங்கோடு சேலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (51). ரிக் தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் ஏற்கெனவே சாலை விபத்தில் இறந்துவிட்ட நிலையில் தன்னுடைய இன்னொரு மகனான ரதீஸை  டாக்டருக்கு படிக்க வைத்துள்ளார். ரதீஸ் எம்பிபிஎஸ் படித்துவிட்டு பயிற்சி மருத்துவராக ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை செங்கோட்டுவேல் தன் சொந்த வேலையாக கோவை சென்று வீட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டுயிருந்துள்ளார். அப்போது மதியம் 2.30 அளவில் அவருடைய செல்போன் லைனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.  அப்போது பேசிய மர்மநபர்கள் "உனது மகன் ரதீசை கடத்தி கொலை செய்ய எங்களை ஒரு கூலிப் படை நியமித்து உள்ளனர். இதற்கு எங்களுக்கு ரூ25லட்சம் அட்வான்சும் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி உன்னையும் சேர்த்துக் கொன்றால்  3 கோடி தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

ஆனால் உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். நீ எனக்கு  30 லட்சம் கொடுத்தால், உன்னை கொலை செய்ய சொன்னவர்களை 3 மணி நேரத்திற்குள்  நாங்கள் கொன்று விடுகிறோம்" எனவும், நீ ஒருவேலை தர மறுத்தல் அடுத்த சில நிமிடங்களில் கடத்திவிடுவோம் என கூறியுள்ளனர். ஏற்கெனவே ஒரு மகனை விபத்தில் இழந்து விட்ட நீ இந்த மகனையும் இழந்து விடாதே என மிரட்டியுள்ளனர். பதறிய செங்கோட்டுவேல் அப்படி ஒன்றும் செய்துவிடாதிற்கள். நான் கார் ஓட்டிக் கொண்டுள்ளேன் ஊருக்கு வந்தவுடன் பணம் ஏற்பாடு செய்கிறேன் என கூறியுள்ளார். உடனடியாக இது குறித்து நகர காவல் துறை ஆய்வாளர் பாரதி மோகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது போலீஸார் கூறிய அறிவுரைப் படி மர்ம நபர்களுடன் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார். 


  
இரவு 8 மணிக்கு மேல் போன் செங்கோட்டுவேலுக்கு வரவில்லை. அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு போன் செய்த பேசிய மர்மநபர், எவ்வளவு பணம் ரெடியாக உள்ளது என கேட்டுள்ளான். 50 ஆயிரம் மட்டும் இப்போது ரெடியாக இருப்பதாகவும் நாளை வங்கியில் பணம் எடுத்து மீதிபணத்தை தருவதாகவும் கூறியுள்ளார். சரி, கையில் உள்ள பணத்தை மட்டும் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகில் போடும் படி கூறியுள்ளான். அதற்கு நான் தனியாக இரவில் வர மாட்டேன் என செங்கோட்டுவேல் கூறியுள்ளார். அதனைதொடர்ந்து தொடர்ந்து திங்கள் காலை போன் செய்கிறோம். அப்போது  நாங்கள் சொல்லுமிடத்தில் பணத்தை கொண்டு வந்து தரும் படி கூறியுள்ளனர். இதற்கும் மறைவான இடத்திற்கு வர முடியாது என செங்கோட்டுவேல் கூறியுள்ளார். 

இதனை அடுத்து மலைசுற்றி ரோடு மலையடிக் குட்டை அருகே பணத்தை ஒரு பையில் வைத்து குறிப்பிட்ட இடத்தில் வைக்க சொல்லி  மர்ம நபர்கள் கூறியுள்ளனர். இதன்படி செட்டப் செய்யப் பட்ட பணக்கட்டுகளுடன் செங்கோட்டுவேல் கிளம்பியுள்ளார். மர்ம நபர்கள் சொன்ன இடத்தில் கொண்டுபோய் பணப்பையை வைத்துள்ளார் செங்கோட்டுவேல். அப்போது  பணப்பையை எடுக்க மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். அப்போது காரில் மறைவான இடத்தில் இருந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஏற்கெனவே தெரிந்த முகமாக இருந்துள்ளது. இதனையடுத்து மாறு வேடத்தில் மறைந்திருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த பக்தவசலம் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் 36 மற்றும் சுரேஷ்குமார் 23  என்ற தறித் தொழிலாளர்களை கைது செய்தனர். 

அதன்பின்னர் போலீஸ்சார் நடத்திய விசாரணையில் செங்கோட்டுவேலிடம் கார் டிரைவராக வேலை பார்த்த எட்டிமடை பகுதியை சேர்ந்த சங்கர் (30), மற்றும் மண்டக பாளையத்தை சேர்ந்த ரிக் அதிபர் சதீஷ் (35) ஆகியோர் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவத்தின் மூளையாக செயல் பட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து தங்களது கூட்டாளிகள் போலீசாரால் கைது செய்யப் பட்டதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். தலைமறைவான இருவரையும் திருச்செங்கோடு நகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என போலீஸ்சார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.