தமிழ்நாடு

“கடைசி காலத்திலாவது மகனுடன் இருக்க ஏழை தாய் விரும்புகிறேன்” - ரவிசந்திரன் தாயார் உருக்கம்

“கடைசி காலத்திலாவது மகனுடன் இருக்க ஏழை தாய் விரும்புகிறேன்” - ரவிசந்திரன் தாயார் உருக்கம்

webteam

தன்னுடைய கடைசி காலத்தையாவது தனது மகனுடன் இருக்க விரும்புகிறேன் என ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் தாயார் ராஜேஸ்வரி வலியுறுத்தியுள்ளார். 

27 ஆண்டுகளாக சிறையில் உள்ள தனது மகன் ரவிசந்திரனை விடுதலை செய்யக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

அந்த கடிதத்தில், “தற்போது எனக்கு 63 வயதாகிவிட்டபடியால் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இறந்துவிட்டதால், நான் தற்போது ஊரில் தனியாக வசித்து வருகிறேன். 21 வயதில் சிறைக்குச் சென்ற என் மகனுக்கு தற்போது 48 வயது. அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இளமையை தொலைத்து சிறையில் 27 ஆண்டுகள் கழித்துவிட்ட என் மகனோடு என்னுடைய கடைசி காலத்தை கழிக்க விரும்புவதே இந்த ஏழைத்தாயின் கடைசி விருப்பம். அதை தங்களின் தலைமையிலான அரசு செய்யும் என நம்புகிறேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார். 

மேலும், “எனது கருணை மனுவினை கனிவுடன் பரிசீலனை செய்து கடந்த 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்து வரும் மகன் ரவிசந்திரனை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் படி உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணை பிறபிக்க வேண்டும். இதுதொடர்பாக தங்களை நேரில் சந்தித்து வலியுறுத்தவும், நன்றி கூறவும் நேரம் ஒதுக்கி தர வேண்டும்” என்று தாயார் ராஜேஸ்வரி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை சிறையில் ரவிச்சந்திரன் இருந்து வருகிறார். 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கு தனது மகனை விடுதலை செய்யக் கோரி தாயார் ராஜேஸ்வரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.