அம்பத்தூரில் பெண்ணொருவர், தன் அறையில் உள்தாழ்ப்பாள் போட்டு வேலை பார்த்துள்ளார். அப்போது அவரது இரண்டு வயது மகன், வெளி தாழ்ப்பாள் போட்டுவிட்டதால், வெளியே வரமுடியாமல் இவர் சிக்கியுள்ளார். அறையின் வெளியே இருந்த குழந்தைக்கு, மீண்டும் தாழ்ப்பாளை திறக்க தெரியாமல் போனதால், தாயும் மகளும் வீட்டிற்குள் வெவ்வேறு அறைகளில் சிக்கியுள்ளனர். வீட்டு கதவும் உள்தாழ்ப்பாளிடப்பட்டிருந்ததால், வெளியே இருந்தும் யாரும் உதவ முடியாமல் போயுள்ளது. இந்த பாசப்போராட்டத்தின் முடிவில், வீட்டினுள் சிக்கிய இருவரையும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் இந்தியன் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்தவரகள் மோகன் - அஸ்வினி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு வயதில் அகிலன் என்ற மகன் உள்ளார். மோகன் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி அஸ்வினி வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் மோகன் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் முன்பக்க கதவை அடைத்து விட்டு தனது அறையில் அஸ்வினி வேலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தாய் இருந்த அறைக்கதவை வெளிப்புறமாக லாக் செய்துள்ளார். இதையடுத்து வெளியே வர முடியாமல் அஸ்வினி தனது மகனிடம் தாழ்பாளை திறக்கச் சொல்லியுள்ளார். ஆனால், தாழ்ப்பாளை திறக்க தெரியாமல் சிறுவன் அழ தொடங்கியுள்ளான்.
குழந்தை மட்டும் வெளியே இருந்ததால், தாய் பதற்றமடைந்துள்ளார். குழந்தையும், தாய் வெளியே வர முடியாததை கண்டு பயந்துள்ளார். இந்நிலையில் அஸ்வினி துரிதமாக செயல்பட்டு, ஜன்னல் வழியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள், அம்பத்தூர் தீயணைப்புத்துறை வீரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள், தாழ்ப்பாள் திறக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி லாவகமாக பூட்டை திறந்து இரண்டு வயது குழந்தை அகிலன் மற்றும் தாய் அஸ்வினி ஆகிய இருவரையும் மீட்டனர். தீயணைப்புத் துறையினரின் இந்த நேர்த்தியான நடவடிக்கையால் பத்திரமாக தாய் மகன் மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.