மதுரை சித்திரை திருவிழாவிற்காக, வைகை அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா ஆகும். இந்த விழா வருகிற 16-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்காக, வைகை அணையிலிருந்து இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை, 216 மில்லியன் கனஅடி தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இன்று மாலை 5 மணியளவில் வைகை அணை திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுடன் சித்திரை திருவிழா நடைபெறுவதால், ஒவ்வொரு நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை பார்க்க பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.