தமிழ்நாடு

சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியருக்கு தர்ம அடி

சிறப்பு வகுப்பு நடத்துவதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியருக்கு தர்ம அடி

webteam

விழுப்புரம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், ஆசிரியரை வகுப்பறையில் பூட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் கிருஷ்ணன்(30) என்பவர் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி உள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால், ஆசிரியர் கிருஷ்ணன் நேற்று இரவு 8 மணி வரை மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தியாக கூறப்படுகிறது. அப்போது ஆசிரியர் கிருஷ்ணன், மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. 

இதனைத்தொடர்ந்து சிறப்பு வகுப்பு முடிந்து இரவு வீட்டிற்கு சென்ற அந்த மாணவி, தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக பள்ளிக்கு வந்த அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளியில் இருந்த ஆசிரியர் கிருஷ்ணனை தாக்கி பள்ளி வகுப்பறையில் வைத்து பூட்டு போட்டுள்ளனர். பின்னர் சில மணி நேரம் கழித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் ஆசிரியரை மீட்கச் சென்ற போது ஊர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆசிரியர் கிருஷ்ணனுக்கு கைவிலங்கு போட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். அத்துடன் போலீஸ் வாகனத்தை வெளியே விடாமல் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் ஊர் பொதுமக்கள் பிடியில் இருந்து ஆசிரியரை பள்ளி வகுப்பறையில் இருந்து போலீஸ் வாகனத்தில் பத்திரமாக மீட்டுச் சென்றனர். தற்போது திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் ஆசிரியர் கிருஷ்ணனை விசாரணை செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் சிறப்பு வகுப்பின் போது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.