தமிழ்நாடு

ஸ்விகியில் முதல் பெண் ! ஆச்சரியப்படுத்தும் உழைப்பு

ஸ்விகியில் முதல் பெண் ! ஆச்சரியப்படுத்தும் உழைப்பு

webteam

இணையவழி உணவு விற்பனை செய்யும் ஸ்விகியில் பெண்களும் பிரதிநிதிகளாக வரத் தொடங்கி உள்ளனர். உணவுப் பொட்டலங்களுடன் கனவுகளையும் சுமந்து செல்லும் இவர்களைப் பார்க்கும்போ‌து வியப்பாகத்தான்‌ உள்ளது.

சென்னை நகர வீதிகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் ஆன்லைன் உணவு சேவை வழங்குவோரை காணாமல் கடந்துவிட முடியாது. பெரும்பாலும் ஆண்கள் தான் இந்த மாதிரியான வேலைகளைச் செய்து வந்தனர். ஆர்டர் பெற்ற உணவுகளுடன் இருசக்கர வாகனங்களில் பறக்கும் இந்த வேலையில் இனி பெண்களையும் காண முடியும். அதற்கு தொடக்கப்புள்ளியாகி இருக்கிறார் சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி.

ஜெயலட்சுமி,ஸ்விகியில் பணியாற்றும் முதல் பெண்
 

மாலை நேரங்களில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணியாற்றும் ஜெயலட்சுமி, பகலில் Swiggy பிரதிநிதியாக பணியாற்றுகிறார். தன்னைப் பார்த்து மேலும் 3 பெண்கள் இதே பணியில் சேர்ந்துள்ளதாகக் கூறுகிறார் ஜெயலட்சுமி. கணவரின் உதவியின்றி தனது முதல் மகளை பொறியியல் பட்டப்படிப்பு படிக்க வைத்து வரும் இவர், அரசின் நீட் பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கும் இரண்டாவது மகளை மருத்துவராக்கும் கனவோடு, உணவு பொட்டலங்களை சுமந்து செல்கிறார். மகள்களின் படிப்பிற்காக இரண்டு இடங்களில் பணி செய்யும் ஜெயலட்சுமியிடம், இந்தப் பணியில் ஒரு பெண்ணாக நீங்கள் எப்படி எனக் கேட்டதற்கு,  “இதுல என்னங்க ஆண், பெண்? வாய்ப்பு கிடைத்தால் செய்ய வேண்டியதுதான்” என்று சிம்பிளாக புன்னகைக்கிறார் ஜெயலட்சுமி.