தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் பெறும் வசதி விரைவில் அறிமுகம்-அமைச்சர் சக்கரபாணி

ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் பெறும் வசதி விரைவில் அறிமுகம்-அமைச்சர் சக்கரபாணி

webteam

நியாயவிலைக் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் பெறும் வசதி வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர், தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் (கைரேகை) அவ்வப்போது கோளாறுகள் ஏற்படுவதால், மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்து பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி பதிவு மூலமாக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், அக்டோபர் 15ம் தேதிக்குள் தமிழகத்தில் சில கடைகளில் சோதனை முறையில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை பரிந்துரை செய்கிறாரோ, அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.