தமிழ்நாடு

சேமநலநிதி கிடைக்காததால் கருணைக் கொலை செய்ய கோரும் தம்பதி

சேமநலநிதி கிடைக்காததால் கருணைக் கொலை செய்ய கோரும் தம்பதி

webteam

திண்டுக்கல் மாவட்டத்தில் அ‌ரசு போக்குவரத்து கழக முன்னாள் ‌ஊழியர் தன்னையும், தனது மனைவியையும் கருணை கொலை செய்ய பரிந்துரைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1972 ஆம் ஆண்டு முதல் 2006 வரை பணியாற்றி இருக்கிறார். நாராயணன் ஓய்வு பெற்ற பிறகு தனது ஓய்வூதியத்தை மட்டுமே பிரதானமாக கொண்டு தனது மனைவி தனலட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரின் ஓய்வூதியத்தை மாதத்தின் முதல் தேதிகளில் வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், சேமநலநிதி உள்ளிட்ட பல்வேறு பணப்பலன்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் புகார் அளித்துள்ளார்.

வயோதிகம் காரணமாக பல்வேறு மருத்துவ செலவுகள் அதிகரித்திருக்கும் நிலையில் செய்வதறியாது தவிப்பதாக நாராயணன் கூறுகிறார். இதனால் தன்னையும், தனது மனைவி தனலட்சுமியையும் கருணைக் கொலை செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்.

தன் உடலில் வலு இருந்த வரை அரசு ஊழியராக பணியாற்றியவர், இறந்த பிறகும் தனது உடலை மருத்துவ மாணவர்களுக்கு உதவும் வகையில் உடல் தானம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.