கிருஷ்ணகிரியில் ஃபேஸ்புக் மூலமாக பழகி கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தவர் குறித்து, காவல்துறை புகாரை வாங்க மறுத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி ஜோதி நகரில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு முகநூல் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. அவ்வப்போது இருவரும் தனியாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக பாலன் கூறியதையடுத்து அந்த மாணவி வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து மாணவியை கோவைக்கு அழைத்துச் சென்ற பாலன், தங்கும் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. பின் திருமணத்துக்குத் தேவையான சான்றிதழ்களை எடுத்து வரவில்லை எனக்கூறி மாணவியை கோவையில் இருந்து சேலம் அழைத்து வந்த பாலன், அவரை அங்கேயே விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி, தனக்கு நடந்த வன்கொடுமை குறித்து கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் கிருஷ்ணகிரி காவல்துறையினர் பொள்ளாச்சி காவல் நிலையத்துக்குச் செல்லும்படி கூறியுள்ளனர்.
இதனைதொடர்ந்து மாணவி பொள்ளாச்சி காவல் நிலையத்திற்குச் செல்ல, அவர்கள் கிருஷ்ணகிரிக்கு சென்று புகார் அளியுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டுள்ளனர். இப்படியே 2 மாதமாக கிருஷ்ணகிரி மற்றும் பொள்ளாச்சி காவல்துறையினர் அலைக்கழித்ததால், நேற்று இரவு மன உளைச்சலுக்கு ஆளான மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது அவரது உடல் கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்துள்ளனர்.