தமிழ்நாடு

தன்னார்வலர்களால் புதுப்பொலிவு பெற்ற சென்னை அண்ணா மேம்பாலம்

தன்னார்வலர்களால் புதுப்பொலிவு பெற்ற சென்னை அண்ணா மேம்பாலம்

webteam

சென்னையின் பிரபலமான அண்ணா மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சென்னை மாநகரில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம். சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த அண்ணா மேம்பாலமானது நாள்தோறும் பல லட்சம் பேர் கடந்துசெல்லும் முக்கிய இடமாக இருக்கிறது. இந்த முக்கியமான மேம்பால சந்திப்பின், கீழ்சுவரில் ஒட்டப்படும் சுவரொட்டிகளால் எப்போதும் மேம்பாலமானது அசுத்தமாகவே காணப்பட்டு வந்தது.

இந்த அசுத்தம் நிறைந்த பகுதியை சுத்தம் செய்யும் நோக்கத்தோடு சென்னையை சேர்ந்த தன்னார்வலர் அமைப்பான ‘உறவுகள்’ மற்றும் ‘நாம் விதைக்கலாம்’ என்ற இரண்டு அமைப்புகள் சார்ந்த உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள், ஐடி பணியாளர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு நாட்களாக இரவு முழுவதும் சுவர் ஓவியம் வரைந்து அசுத்தமாக இருந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியை வண்ணமயமாக மாற்றியமைத்துள்ளனர்.

இது குறித்து தன்னார்வலர் காலித் என்பவர் கூறும்போது “ சென்னையின் முக்கிய மேம்பாலமாக இந்த ஜெமினி மேம்பாலம் இருக்கிறது. இதில் ஒட்டப்படும் சுவரொட்டிகள், போஸ்டர்களை காணும்போது முகம் சுழிக்கும் விதமாக இருந்தது. பல வருடமாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழிக்காமல் ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டியுள்ளனர். எனவே இதனை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி விழிப்புணர்வுடன் கூடிய வரைப்படம் வரைந்து இந்த பணியை இங்கு தொடங்கி உள்ளோம்” என தெரிவித்தார்.