தமிழ்நாடு

நாமக்கல் குழந்தை விற்பனை - விசாரணையை துரிதப்படுத்தும் சிபிசிஐடி

நாமக்கல் குழந்தை விற்பனை - விசாரணையை துரிதப்படுத்தும் சிபிசிஐடி

webteam

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய அமுதா உள்ளிட்ட மூன்று பேரிடம் சேலம் சிபிசிஐடி SP  சாமுண்டீஸ்வரி நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் செவிலியர் அமுதா உள்ளிட்ட பலர் கடந்த பல ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 29ஆம் தேதி சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டது. 5 குழுக்கள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே குழந்தை விற்பனையில் தொடர்புடைய அமுதா ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் இடைத்தரகர் அருள்சாமி ஆகிய 3 பேரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நாமக்கல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து அமுதா உள்ளிட்ட மூன்று பேரிடம் சேலம் சூரமங்கலத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி எஸ்பி சாமுண்டீஸ்வரி நேரில் வந்து மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த 4ஆம் தேதி நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.