தமிழ்நாடு

திருப்பூர் கொள்ளை சம்பவம்: குண்டர் சட்டத்தை ரத்துசெய்ய கோரிய கைதிகள்! நீதிமன்றம் அதிரடி

திருப்பூர் கொள்ளை சம்பவம்: குண்டர் சட்டத்தை ரத்துசெய்ய கோரிய கைதிகள்! நீதிமன்றம் அதிரடி

webteam

திருப்பூர் நகைக்கடையில் 3 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட பீகாரை சேர்ந்த 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஜெ.கே.ஜுவல்லரியை கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பத்ருல், தில்கஷ், முகமது சுபான், முர்தாஜா ஆகியோரை திருப்பூர் மாநகர காவல் துறையினர் மகாராஷ்டிராவில் கைது செய்தனர்.

இதையடுத்து தமிழ்நாட்டிற்கு அவர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்களிடமிருந்து நகைகளை மீட்டபின்னர், நால்வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து தங்கள் மீது போடபட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, நால்வர் மீதான குற்றச்சாட்டு அனைத்திற்கும் ஆதாரங்கள் இருப்பதாகவும், குண்டர் சட்டத்தை ரத்து செய்தால் வழக்கிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதால், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.

இதன் பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய நான்கு பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.