தமிழ்நாடு

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக மீனவரின் உடலை மீட்டுவர நடவடிக்கை - அனிதா ராதாகிருஷ்ணன்

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக மீனவரின் உடலை மீட்டுவர நடவடிக்கை - அனிதா ராதாகிருஷ்ணன்

JustinDurai
இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட மீனவரின் உடல், விரைவில் தமிழகம் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கிரண்(30), சுகந்தன்(30), சேவியர் (32) ஆகிய 3 மீனவா்கள் படகில் செவ்வாய்க்கிழமை காலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் மீனவர் படகில் மோதி கடலில் மூழ்கடித்ததாக கூறப்படுகிறது. இதில் ராஜ்கிரண் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் தத்தளித்த சுகந்தன், சேவியர் ஆகிய இருவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராஜ்கிரணின் உடலை தேடி வந்த நிலையில், அவரது சடலம் புதன்கிழமை அதிகாலை இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டது.
இந்நிலையில் ராஜ்கிரணின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வரவும், கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், 'புதிய தலைமுறை'க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''மீனவர் ராஜ்கிரண் உயிரிழந்த நிலையில் இலங்கையில் உள்ள அவரது உடலை தமிழகம் கொண்டுவர அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அனைத்து பொறுப்பும் ஒன்றிய அரசிடம் உள்ளதால் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் நடவடிக்கைக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
நானும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் இறந்த மீனவரின் உடலை இந்தியா கொண்டு வரவும், சிறை பிடிக்கப்பட்டுள்ள இரண்டு மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கோரிக்கை விடுத்துள்ளேன். இறந்த மீனவரின் சடலம் விரைவில் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.