பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகைக்குப்பிறகு மாமல்லபுரத்தை காண சுற்றுலாப் பயணிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று அங்குள்ள புராதனச் சின்னங்கள், இரவில் மின்னொளியில் மிளிர்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலை அழகை, உலகுக்கு பறைசாற்றும் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, ஐந்துரதம் மற்றும் வானிறை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இச்சிற்பங்களால், யுனெஸ்கோ அங்கீகாரம், மத்திய அரசின் புவிசார் குறியீடு மற்றும் உலக கைவினை நகரம் என பல்வேறு அங்கீகாரங்கள் மாமல்லபுரத்துக்கு கிடைத்துள்ளன. இதனால், கலைச் சின்னங்களை கண்டு ரசிக்க வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இருநாடுகளுக்கு இடையேயான முக்கிய பேச்சு வார்த்தைகளுக்காக, மாமல்லபுரத்தில் கடந்த 11-ஆம் தேதி நேரில் சந்தித்து பேசினர். இதற்காக, தமிழக அரசு சார்பில் மாமல்லபுரம் நகரம் மற்றும் கலைச் சின்ன வளாகங்களில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, சாலைகள், கலைச் சின்ன வளாகங்கள் அழகுபடுத்தப்பட்டன.
மாமல்லபுரத்தை பிரதமர் மோடியும், சீன அதிபரும் கண்டு ரசித்தபின், அந்த இடங்களை காணும் ஆர்வம் பலருக்கும் அதிகரித்துள்ளது. ஆனால், தலைவர்கள் பார்வையிட்டு சென்ற பின்பு மின்விளக்குகள் ஒளிராததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இதனால், குடைவரை சிற்பங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் இரவிலும் கண்டு ரசிக்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று, மாமல்லபுரம் புராதன சிற்பங்களை வார இறுதி நாட்களில் மின்னொளியில் இரவு 9 மணிவரையில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
தலைவர்கள் வரும் போது சுத்தமாக இருந்த இடங்கள் அதற்கு பின் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்தது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குப்பை போடாமல் கண்காணிக்கவும் சுத்தமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது