அதிகப்படியான வெள்ள நீரால், தரைதளத்தில் இருக்கும் மக்கள் மாடிகளில் குடியேறியும், அக்கம் பக்கத்து வீடுகளில் தஞ்சமைடைந்தும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தாலும், தனியார் அமைப்பினர் சிலரும் படகு கொண்டு வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு வருகின்றனர்.
மாநகராட்சி தரப்பில் உதவிகள் செய்யப்பட்டு வந்தாலும், வேளச்சேரி மக்கள் பலருக்கு அவை எட்டாக்கனியாக இருக்கிறது. பால், உணவு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மின் தடை மற்றும் நெட்வொர்க் பிரச்சனையால் மக்கள் தவித்து வருகின்றனர்.
ரப்பர் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மக்களை மீட்டு வருகின்றனர். அப்படி கைலாசம் பகுதியில் மீட்கப்பட்ட நபர் ஒருவர் பேசுகையில், "மாடியிலிருந்து படகுக்காக 100 முறை கத்தியிருப்பேன். இதுபோன்று பல பேர் படகுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மீட்புப்படையினர் இல்லை என்றால் எங்களால் எதுவும் செய்ய முடியாது.
இதுபோன்ற கடவுளின் சேவர்களால்தான் எங்களால் பிழைக்க முடிகிறது. அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.