மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து. அது அதிமுகவின் மொத்த கருத்தல்ல என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் தொழில் வர்த்தகப் பொருட்கள் கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சிறந்த தொழில் முனைவோர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், “அதிமுகவின் மக்கள் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னரும் அதிமுக அரசிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து வருகிறது.
அரசியலில் கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்படும் முடிவாகும். கடந்த தேர்தலில் ஜெயலலிதா கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டாலும், தற்போது கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு அதிமுக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தம்பிதுரை ஒரு மூத்த தலைவர். அவரது அனுபவத்தின் அடிப்படையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அது அவரது தனிப்பட்ட கருத்து, அது கட்சியின் மொத்த கருத்தல்ல” என்று தெரிவித்தார்.