தமிழ்நாடு

தென்காசி விவசாயியின் உடலில் நான்கு இடங்களில் காயம் - உடற்கூராய்வில் தகவல்

தென்காசி விவசாயியின் உடலில் நான்கு இடங்களில் காயம் - உடற்கூராய்வில் தகவல்

webteam

தென்காசி விவசாயி உயிரிழப்பு விவகாரத்தில், விவசாயின் உடலின் 4 இடங்களில் காயம் உள்ளது உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தைச் சேர்ந்த விவசாயியான அணைக்கரை முத்து என்பவர் அவரது வீட்டின் பின் பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார். தோட்டத்தை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க அவர் மின்வேலி அமைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவரை கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. விவசாயின் இறப்புச் செய்தியைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிகாரிகள் தாக்கியதால்தான் முத்து இறந்ததாகக் கூறி, அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வந்தனர். இதனிடையே முத்துவின் மகள் வசந்தி அப்பாவின் உடற்கூறு ஆய்வு எங்களுக்கு தெரியாமலேயே நடத்தப்பட்டது என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது.


அப்போது அரசுத்தரப்பில் அணைக்கரை முத்துவின் உடற்கூராய்வு அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகள், வழக்கின் நிலை அறிக்கை உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கைகளை ஆராய்ந்த நீதிபதி, தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வாறு உடற்கூராய்வு செய்யப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.


அதற்கு அரசுத்தரப்பில், நீதிமன்றம் அதனை உத்தரவாக அல்லாமல் அறிவுரையாகவே வழங்கியது என்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் நோக்கிலேயே விரைவாக உடற்கூராய்வு செய்யப்பட்டது என்றும் இவையனைத்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி உடற்கூராய்வு அறிக்கையில் அணைக்கரை முத்துவின் உடலின் நான்கு இடங்களில் காயம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது" எனக் கூறி வழக்கை நாளை ஒத்திவைத்தார்.