சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக நீடித்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், கடந்த 5 நாட்களில் 99 பெண்கள் உட்பட 210 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட், தங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும், தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும், நெருக்கடி அதிகரித்தால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது எனவும், அறிக்கை பெறப்பட்ட பின்புதான் கோரிக்கைக்கான தீர்வு குறித்து முடிவு தெரியவரும் எனவும் முதன்மைச் செலயாளர் பிரதீப் யாதவ் தெரிவித்தார். எனவே போராட்டத்தை கைவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.